ஜோதிடம்

ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள்! அதிக கவனம் தேவை!

ரிஷபம் – Guru Peyarchi Palangal 2023 – 2024 (TAMIL)
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2023-2024 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

ரிஷபம் – குரு பெயர்ச்சிப் பலன்கள்
என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இடைவிடாமல் உழைக்கும் ரிஷபராசி அன்பர்களே எல்லோரையும் சமமாக நேசிக்கும் உங்களின் ராசிக்கு 11 ம் வீட்டில் அமர்ந்து பணவரவைத் தந்துகொண்டிருந்த குருபகவான் தற்போது விரைய வீடான 12 ம் வீட்டில் அடியெடுத்துவைக்கிறார். எனவே செலவுகளில் சிக்கனம் தேவை. என்றாலும் எட்டுக்குடையவன் 12 ம் வீட்டில் மறைவது நல்ல பலன்களையே கொடுக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அனைவரையும் அன்பால் அரவணைத்துப்போக வேண்டியது அவசியம். யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம்.

என்றாலும் குரு உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய வீடுகளைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடுவாங்கும் கனவு நனவாகும். சகோதரர்கள் தங்களின் தவற்றை உணர்ந்து வந்து அன்புபாராட்டுவார்கள். வாகன யோகமும் வாய்க்கும். திரும்பக் கிடைக்காது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்யும். என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது,

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
23.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 வரை

முதல் 6.2.2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் தேவையான பணம் வரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சித்தர் பீடங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

உங்கள் ராசிநாதனான சுக்கிர பகவானுக்குரிய பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் திடீர் பொருள்வரவுக்கு வாய்ப்புண்டு. மதிப்பு மரியாதை உயரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும். திருமணம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்குத் திருமணம் கைகூடும்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை

குருபகவான் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சஞ்சரிக்கிறார். சூரியனுக்குரிய கார்த்திகையில் குரு சஞ்சாரம் செய்வது ரிஷபத்துக்கு நல்லபலன்களைத் தரும். அரசுக்காரியங்கள் அனுகூலமாகும். நின்றுபோன வீடுகட்டும்பணி அல்லது பழைய வீட்டைப் புதுப்பிக்கும் பணியைத் தொடங்குவீர்கள். என்றாலும் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது அவசியம்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

குருபகவான், 11.9.2023 முதல் 20.12.2023 வரையிலான காலகட்டத்தில் அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரத்தில் வக்ர கதியில் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும்.,குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் தீரும். என்றாலும் மனதில் ஒரு சோகம் இருந்தவண்னம் இருக்கும். இறைவழிபாட்டின் மூலம் அது விலகி உற்சாகம் பிறக்கும்.

வியாபாரிகள் : லாபத்தை இரட்டிப்பாகும். புதிய முதலீடுகள் செய்ய வங்கிக்கடன் உதவி கிடைக்கும். நல்ல பணியாளர்கள் அமைவார்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன் முதல் ஆகஸ்டு வரை லாபம் இரட்டிப்பாகும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் : கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அவ்வப்போது வருந்தம் ஏற்பட்டாலும் மூத்த அதிகாரி ஆறுதலாக இருப்பார். அலுவலகச் சூழலில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு வாய்ப்புண்டு. வேலை பளு அதிகரிக்கும். என்றாலும் எதிர்கால நன்மை கருதிப் பணியாற்ற வேண்டியது அவசியம்.

இந்த குருப்பெயர்ச்சி பணவரவையும், செலவினங்களையும் கலந்துத் தரும். படிப்படியான முன்னேற்றத்தைத் தந்து வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்தும்.

Back to top button