ஜோதிடம்

குருபெயர்ச்சி பலன்கள்! கோட்டை கட்டுமா விருச்சிகம்!

விருச்சிகம் – Guru Peyarchi Palangal 2023 – 2024 (TAMIL)
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2023-2024 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

விருச்சிகம் – குரு பெயர்ச்சிப் பலன்கள்
கலகலப்பான குணமும் கலங்காத மனமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே… இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான மீனத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த குருபகவான் தற்போது ஆறாம் இடமான மேஷராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். 22.4.2023 முதல் 1.5.2024 வரை ஆறாவது வீட்டில் குருபகவான் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஆறில் குரு அமர்வது சிற்சில தடைகளை ஏற்படுத்ததான் செய்யும். எதையும் போராடி சாதிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் குழப்பங்கள் வந்த வண்ணம் இருக்கும் விட்டுக்கொடுத்துப் போகும் குணமும் பொறுமையும் அவசியம். யாரையும் நம்பி உங்கள் ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். யாருக்கும் ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். கையிருப்பு கரைவதால் பதற்றமாவீர்கள்.

என்றாலும் குருபார்வை உங்கள் ராசிக்கு 2,12,10 ஆகிய ஸ்தானங்களுக்குக் கிடைப்பதால் மலைபோல் வரும் பிரச்னையும் பனிபோல் விலகும். பேச்சில் பக்குவம் பிறக்கும். செலவுக்கு ஏற்பப் பணமும் வந்து சேரும். கொடுத்துத் திருப்பி வராமல் இருந்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்குள் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.மதிப்பு மரியாதை கூடும்.

சுபச்செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். அதனால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வீடு வாங்கும் கனவு நனவாகும். என்றாலும் புது சொத்துக்கள் வாங்கும்போது பத்திரங்களை வழக்கறிஞர்கள் மூலம் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை

குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும். விசாகம் 4 -ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்களை முடிக்கும் துணிச்சல் பிறக்கும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் திருமண வரம் கைகூடும். கடன்களை அடைக்கும் அளவுக்குப் பணம் வரும். புதிய வாகன யோகம் வாய்க்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

17.4.2024 முதல் 1.5.2024 வரை

குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு உண்டாகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

11.9.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் வக்ர கதியில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் புத்திக்கூர்மை அதிகமாகும். வாழ்க்கைத்துணைக்குப் புதிய வேலை கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு வாகன யோகம் அமையும்.

வியாபாரிகள் : தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். எனவே பதற்றம் இன்றிச் செயல்பட வேண்டியது அவசியம். புதிய முடிவுகளையோ அதிரடி மாற்றங்களையோ இந்த ஆண்டு செய்ய வேண்டாம். தர்ம சங்கடமான சூழ்நிலைகள் உருவாகும்போது அவற்றை நிதானமாகக் கையாண்டு வெற்றி பெறுங்கள். பாக்கிகளை வசூலிக்க அலைய வேண்டியிருந்தாலும் பலன் கிடைக்கும். பேச்சுத் திறமை கை கொடுக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, பெட்ரோ கெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் : பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் நிதானமாகப் பணி செய்ய வேண்டியது அவசியம். சக ஊழியர்கள் குறித்து யாரிடமும் தனிப்பட்ட முறையில் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். நம்பியவர்களே உங்களைப் பற்றிக் குறை சொல்வார்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலக சூழ்நிலை மகிழ்ச்சி தரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அன்றாட வாழ்வில் சில படிப்பினைகளையும், நாசூக்காக நடந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்துவதாக அமையும்.

Back to top button