தாயகம்

வெளிநாட்டு மோகம்! யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாமென யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த கோரியுள்ளார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி போலி முகவர் நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான போலி முகவர்களுள் பலர் கொழும்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார். கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ் மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலி முகவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜகத் விசாந்த சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, ஒருவரிடம் சுமார் 20 இலட்சம் முதல் 90 இலட்சம் வரையான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் குடிபெயர வேண்டுமென்ற ஆசை காரணமாக பலர் குறித்த தொகையை செலுத்தி, ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதில் அதிகளவானோர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறுவதாகவும், குறித்த விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள தொகையை முகவர்களுக்கு அவர்கள் வழங்குவதாகவும் யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தற்போது பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும், முறைப்பாடு செய்யாத பலர் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட தரப்பினரை உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களில் முறையிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு முகவர் நிறுவனங்கள் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் இருப்பதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுவோர் அவர்களை மாத்திரம் நாடுமாறும் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார்.

Back to top button