உலகம்

🇨🇦கனடா புலம்பெயர்தல்! கனடா மக்களின் நிலை என்ன? தொடரும் எதிர்ப்புகள்!

கனடாவில் புலம்பெயர்தல் மைய பேசுபொருளாக ஆகியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
ஆண்டுக்கு இத்தனை புலம்பெயர்வோரை கனடா வரவேற்கிறது என ஒரு பக்கம் கனடா அரசு பெருமை பீற்றிக்கொள்ள, மறுபக்கம், வீடுகள் பற்றாக்குறைக்கு புலம்பெயர்தல்தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்ட, புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள், அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, கனடா அரசியலே புலம்பெயர்தலை மையமாக வைத்தே நடப்பதாக தோன்றுகிறது. சரி, கனடா அரசும், அரசியல்வாதிகளும்தான் இப்படி புலம்பெயர்தலுக்கெதிரானவர்களாக இருக்கிறார்கள் என்றால், கனடா மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்தலுக்கு எதிராக இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Ledger ஆய்வு முடிவுகள் Ledger அல்லது Leger என்னும் ஆய்வமைப்பு, நவம்பர் மாதம் மேற்கொண்ட ஆய்வில், வெறும் 9 சதவிகித கனேடியர்கள் மட்டுமே, பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 43 சதவிகிதம் பேர், இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்று கூற, 39 சதவிகிதம் பேர், குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். அதே ஆய்வில், 72 சதவிகித கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதும் நிலையில், அதே எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 75 சதவிகித கனேடியர்கள், வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்றும், 73 சதவிகிதம் கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும், 63 சதவிகிதம் பேர், பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட, இதே கருத்தைத்தான், Environics மற்றும் Nanos முதலான ஆய்வமைப்புகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், வீடுகள் தட்டுப்பாடு முதலான காரணங்களை மையமாக வைத்து, கனேடிய மக்கள் புலம்பெயர்ந்தோருக்கு அளித்து வந்த ஆதரவு சமீப காலமாக கணிசமாக குறைந்து வருவதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன எனலாம்.

Back to top button