துறவியான யாழ் வம்சாவளி! விட்டுச் சென்ற பல ஆயிரம் கோடிகள்!
மலேசியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஒருவர் தனது சொகுசான வாழ்க்கை, ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் சென்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தமிழரான கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் மகன் வெண் அஜான் ஸ்ரீபன்யோ (Ven Ajahn Siripanyo) தான் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள், ஆடம்பரங்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவறம் சென்றுள்ளார். AK எனச் செல்லமாக அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணனின் நிகர சொத்து மதிப்பு ரூ.40,000 கோடி ஆகும். கிருஷ்ணனின் வணிக சாம்ராஜ்யத்தின் அடிக்கற்கள் எண்ணெய் தொழிலில் மூலம் அமைக்கப்பட்டன. அவர் முதலில் ஒரு எண்ணெய் வர்த்தகர். அவரது முதல் முயற்சியாக எண்ணெய் வர்த்தக சலுகைகளை கையாண்ட நிறுவனம் Exoil Trading ஆகும்.
கிருஷ்ணன் எண்ணெய் வர்த்தகத்தில் சம்பாதித்த பணத்தில் இருந்து அதிகமான தொழில்முனைவு முயற்சிகள் பிறந்தன. தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, சாட்டிலைட் ஆபரேட்டர் MEASAT மற்றும் பிராட்பேண்ட் வழங்குநரான Maxis ஆகியவை அவரது சிறந்த வணிக நிறுவனங்கள் ஆகும்.
டெலிகாம் துறையில் மிகப் பெரிய தொழிலதிபர். எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியை ஸ்பான்ஸர் செய்தவர். தற்போது, அவர் ஊடகம் (Astro), செயற்கைக்கோள் (MEASAT), எண்ணெய் மற்றும் எரிவாயு (Bumi Armada, Pexco), தொலைத்தொடர்பு (Maxis, Sri Lanka Telecom) ஆகியவற்றில் வணிகத்தை செய்து வருகிறார். ஆனந்த கிருஷ்ணனின் மெகா பில்லியன் டொலர் டெலிகாம் சாம்ராஜ்ஜியத்தின் வாரிசாக வேண்டிய வெண் அஜான் ஸ்ரீபன்யோவை விதி வேறு இடத்துக்குக் கொண்டு சென்று விட்டது. ஆனந்த கிருஷ்ணனின் தொழில் சாம்ராஜ்ஜியம், டெலிகாம், சமூக ஊடகம், ஆயில் அண்டு கேஸ், ரியல் எஸ்டேட், சாட்டிலைட்டுகள் என பரந்து பட்டுள்ளது. ஆனந்த கிருஷ்ணனின் சொத்து அவரை மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆக ஆக்கியுள்ளது.
ஆனந்த கிருஷ்ணனன் ஒரு தொழில் அதிபராக இருந்தாலும் சிறந்த கொடை வள்ளலாகவும் இருக்கிறார். அவர் புத்த மதத்தை தழுவியுள்ளார். ஏழைக் குழந்தைகளின் படிப்பு, மனிதநேய உதவிகள் ஆகிய ஏராளமான நல்ல விடயங்களை செய்து வருகிறார்.
அவரது மகன் ஸ்ரீபன்யோ தனது 18 ஆவது வயதில் பௌத்த துறவியாக மாறிவிட்டார். ஸ்ரீபன்யோவின் துறவி வாழ்க்கை பற்றி அதிகம் வெளிவரவில்லை என்றாலும் அவர் வேடிக்கையாக இந்த துறவறத்தை ஏற்றதாகக் கூறப்படுகிறது.
தாற்காலிகமாக இப்போது துறவறம் பூண்டாலும் பின்னால் அதையே நிரந்தரமாக அவர் பின்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
ஸ்ரீபன்யோ தனது செல்வத்தைத் துறந்து துறவு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் தாய்லாந்தின் தாவோ டம் மடாலயத்தின் மடாதிபதியாக உள்ளார்.