தாயகம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுதலை செய்த நீதிமன்றம்!

மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராஜா என அழைக்கப்படும் வேலுப்பிள்ளையான் தியாகராஜா என்ற பிரதிவாதியை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


தனிப்பட்ட தகராறில் கொலை
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தரவின் இணக்கப்பாட்டுடன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்தபோதே நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ருவன்வெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஆறுமுகம் சந்திரசேகரனின் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் கேகாலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

நீண்ட விசாரணையின் பின்னர், 2018 ஓகஸ்ட் 9 ஆம் திகதி தீர்ப்பை வழங்கிய கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜாவுக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மற்றுமொரு குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த மயில்வாகனம் மனோரஞ்சனை விடுதலை செய்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மரண தண்டனையில் இருந்து விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி இதனையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, குற்றம் சுமத்தப்பட்ட வேலுப்பிள்ளையான் தியாகராஜா மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.


மேன்முறையீட்டு மனுவை நீண்ட காலமாக ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், உயர் நீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை சரியான முறையில் ஆய்வு செய்யவில்லை என்று கூறியது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், அவரை குற்றவாளி என உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு சரியானது அல்ல என்று கூறியது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பிரதிவாதியை அந்த தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச் தனது தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Back to top button