🇫🇷அமைதியை தேடிச் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண்!
அமைதியைத் தேடி பல நாடுகளுக்குப் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர், அமெரிக்காவில் யோகா மற்றும் தியானம் மூலம் அமைதியைக் கண்டுகொண்டார். பல்வேறு தியான முறைகளைக் கற்றுக்கொண்டாலும், ஏதோ குறைவதாகவே தோன்றியுள்ளது அவருக்கு. அப்படியானால், யோகாவின் பிறப்பிடமான இந்தியாவுக்கே சென்றால் என்ன என்று தோன்ற, இந்தியாவின் கேரள மாநிலத்தை வந்தடைந்தார் அவர்.
அவரது பெயர், ஜெரால்டைன் (Geraldine Paqueron). கேரளாவிலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் என்னும் சிறிய நகரத்தில் அமைந்துள்ள Big Banana Retreat என்னும் யோகா மற்றும் ஆயுர்வேத மையத்தை யாரோ ஒருவர் பரிந்துரைக்க, அங்கு தான் நிரந்தரமாகவே வாழப்போகிறோம் என்பதை அறியாமலே அங்கு வந்து சேர்ந்துள்ளார் ஜெரால்டைன்.
ஆம், அங்கு அவர் அமைதியை மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையான தீபனையும் கண்டுபிடித்துள்ளார். மக்கள் தன் மீது காட்டும் அன்பு, தனக்கு சரியாக மொழி தெரியாவிட்டாலும், தப்புத் தப்பாக தான் பேசும் மலையாள மொழியையும் ரசித்து, தன்னை சொந்தப் பிள்ளை போல அவர்கள் நடத்தும் விதம், என எல்லா விடயங்களும் அவருக்கு மன மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுப்பதாக தெரிவிக்கிறார் ஜெரால்டைன்.
ஆயுர்வேதம் முதல் உணவு வரை கணவர் உதவியால் கேரள கலாச்சாரம், யோகா மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஆயுர்வேதம் குறித்தும் அறிந்துகொண்ட ஜெரால்டைன், கேரள உணவுகளும் தனக்குப் பிடித்துப்போனதாக தெரிவிக்கிறார். குறிப்பாக, தனது கணவர் வீட்டில் தயாரிக்கப்படும் இடியாப்பம், கடலைக்கறி முதல் வகை வகையாய் தயாரிக்கப்படும் தோசை வரை அனைத்து உணவுகளையும் ரசிக்கும் ஜெரால்டைன், தீபன் மற்றும் அவரது தாயுடன் ஒரு இந்திய மருமகளாகவே மாறி வாழ்ந்துவருகிறார்.