🇫🇷பிரான்ஸ் காவல்துறையால் பறிக்கப்பட்ட உயிர்!
30 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்படும் போது உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இருந்து கிடைத்த அழைப்பை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ஏற்பட்ட குழப்பம் ஒன்றை அடுத்து, குறித்த 30 வயதுடைய ஒருவரை கைது செய்ய நேர்ந்தது.
அதன் போது மின்சாரத்தினை பாய்ச்சும் பிஸ்டல் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டதாகவும், அதில் நிலைகுலைந்த நிலையில், குறித்த நபர் Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது. அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கைது செய்யப்படும் போது குறித்த நபர் ஆக்ரோஷமாக செயற்பட்டதாகவும், காவல்துறை வீரர் ஒருவரது கையினை கடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே காவல்துறையினர் மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியால் சுட்டதாகவும் அறிய முடிகிறது.
மேற்படி உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் காவல்துறையினரைக் கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.