🇫🇷பிரித்தானியாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்! குற்றம் சாட்டும் பிரான்ஸ்!
புலம்பெயர்ந்தோர் சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க, தங்களுடன் பிரித்தானியா போதுமான அளவில் ஒத்துழைக்கவில்லை என பிரான்ஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் சட்ட விரோதமாக நுழைவது பிரித்தானியாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
ஆகவே, பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க, பிரான்சிடம் பிரித்தானியா உதவி கோரியது. அதற்காக பிரான்சுக்கு பெரும் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புலம்பெயர்ந்தோர் சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க, பிரித்தானியா தங்களுக்கு போதுமான அளவில் ஒத்துழைப்பு தரவில்லை என பிரான்ஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் பொதுமக்கள் பணம் எப்படி செலவிடப்படுகிறது என்பதைக் கண்காணிக்கும் The cour des comptes என்னும் அமைப்பே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த கணக்காளர்கள், சிறு படகுகள் தொடர்பில் பிரித்தானியா பயனுள்ள தகவல்களை தங்களுக்குக் கொடுக்கவில்லை என்றும், சரிபார்க்கப்படாத அடிப்படை தகவல்களை மட்டுமே பிரித்தானியா கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
படகுகளில் பயணிப்போர் எந்த நாட்டவர்கள், படகு மற்றும் படகின் மோட்டாரின் சீரியல் எண்கள் முழுமையாக இல்லை என கணக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், இது பழைய தகவல் என்றும், தாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரான்சுடன் இணைந்து கடத்தல்காரர்களை கண்டுபிடிப்பது மற்றும் படகுகளை தடுத்து நிறுத்துவது ஆகிய நடவடிக்கைகளை திறம்பட எடுத்துவருவதாகவும் பிரித்தானிய உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.