பிரான்ஸில் குளிர்பானத்தால் சிக்கிய திருடன்!
திருடச் சென்ற வீடொன்றில் குளிர்பானம் அருந்திய திருடன் ஒருவர், காவல்துறையினர் மேற்கொண்ட மரபணு சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 ஆம் திகதி, திருடன் ஒருவருக்கு Yvelines மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த வருடம் ஒக்டோபரில் அவர் Fontenay-le-Fleury (Yvelines) நகரில் உள்ள பூட்டியிருந்த வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு இருந்த €12,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையிட்டிருந்தார்.
வீட்டின் உரிமையாளர் 10 நாட்களின் பின்னர் வீட்டுக்குத் திரும்பியிருந்த போது வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை தெரியவந்தது. பின்னர் அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானம் ஒன்றை எடுத்து, குவளையில் விட்டு அதனை அருந்தியிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதில் பதிந்த கைரேகைகளை தடயவியல் அதிகாரிகளை அழைத்து பரிசோதித்ததில், திருடன் அடையாளம் காணப்பட்டார். காவல்துறையினரால் முன்னதாகவே அறியப்பட்ட வீடற்ற ஒருவரே (SDF) மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது.