தாயகம்

தவறான உறவு! கொலை செய்யப்பட்ட சிறுமி!

காலியில் உள்ள எல்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில், தல்கஹவத்த, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி எனும் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


உயிரிழந்த சிறுமி கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளதாகவும், தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியும், கொலை செய்த சந்தேக நபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சிறுமியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் எல்பிட்டிய, நாணயக்கார மாவத்தைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் குறித்த சிறுமி நேற்று (09-03-2024) சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறித்த சிறுமியின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button