🔴வெளிநாட்டில் இருந்து கிளிநொச்சி இளைஞனுக்கு வந்த கோடிக்கணக்கான பணம்! அதிர்ச்சியில் CID!
யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க முன்னிலையில் நேற்று (18) இதனை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர்.
11 சந்தர்ப்பங்களில் பல கோடி ரூபா
தற்போது ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற கிளிநொச்சி பிரதேசத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் குமாரசாமி மனோகரன், கிளிநொச்சியைச் சேர்ந்த மகேந்திரன் பார்த்திபனின் வங்கிக் கணக்குகளுக்கு 11 சந்தர்ப்பங்களில் பல கோடி ரூபா பணத்தை அனுப்பியுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இதன்படி, கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் முகாமையாளருக்கு குறித்த பணம் தொடர்பான வங்கி பதிவேடுகளை வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சமவாயச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை ஒடுக்குவதற்காக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பயங்கரவாத நிதிப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்க நீதிமன்றில் அறிக்கை செய்திருந்தார். ஜேர்மனியில் உள்ள இந்த புலிகளின் பிரமுகரால், பார்த்திபனின் பெயரில் கிளிநொச்சியில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி ரூபா பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனை , பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான கருவிகளை கொள்வனவு செய்வதற்கு பார்த்திபன் அவற்றை செலவிட்டதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கு பணம்
ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கு தேவையான பாகங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக பார்த்தீபன் இந்த பணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
வடமாகாணத்தில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கும், அவற்றை சேகரிப்பதற்கும் குறித்த பணத்தை சந்தேகநபர் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். இதன் காரணமாக சந்தேகநபரான பார்த்திபனுக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பயங்கரவாத நிதியளிப்பு உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். இதன்போது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.