🔴காணாமல் போகப் போகும் யாழ்ப்பாண கிணறுகள்!
காணாமல் போகப் போகும்
யாழ்ப்பாண கிணறுகள்!
இதை கேட்கும் போது வடிவேலுவின் கிணற்றை காணோம் என்கிற திரைப்பட காமடி ஞாபகத்துக்கு வத்தாலும் வெகுவிரைவில் இன்னும் சில வருடங்களில் இந்த செய்தி அதிகமாக உணரப்படும்!
அதுவே யதார்த்தமான உண்மையும் கூட!
ஆம்,
கிணறுகள் காணாமல் போகும்!
இன்னும் ஏராளமான பகுதிக்கும் உவர்நீர் உட்புகும்!
காலப்போக்கில் முற்றாக விவசாயம் செய்யமுடியாத அளவுக்கு கூட எமது பிரதேச நீர் உவராகலாம்!
கட்டுப்பாடு அற்ற வகையில், நீலத்தடி நீர்க் கட்டுமானங்ளை சரியாக புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக அடிக்கப்படும் ஆழ்துளை கிணறுகளும் குழாய்க் கிணறுகளும் இந்த நிலையை ஏற்படுத்தி இவ்வளவு காலமும் சாதாரண கிணறுகள் மூலம் அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் ஏராளமான சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வியலை எதிர்காலத்தில் இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தப் போகிறது.
ஏற்கனவே வடக்கின் சில பகுதிகளில் குழாய்க்கிணறுகளின் தாக்கத்தால் வற்றிப்போன கிணறுகள் தொடர்பான செய்திகள் பதிவாகிஉள்ளன!
இந்தியாவின் தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் உட்பட உலகின் பலவேறு நாடுகளில் இந்த அனுபவத்தில் பல உதாரணங்கள் உள்ளன! அது நாளை நமது பிரதேசங்களிலும் நடக்கப் போகிறது.
இதை புரிந்துகொள்வதற்கு, யாழ்பாண நிலத்தடி நீர்க்கட்டுமானத்தை எளிய முறையில் விளங்கப்படுத்த முயல்கிறேன். இணைப்பில் உள்ள படங்களையும் பார்த்து புரிந்து கொள்ள முயலுங்கள்!
யாழ்ப்பாண குடாநாடு கிட்டத்தட்ட நான்கு பக்கமும்( மூன்று பெருங்கடல்கள் உட்பட) உவர்நீரால் சூழப்பட்ட ஒரு குடாநாடு.
Geology அடிப்படையில் சுண்ணாம்புக் கற்பறைகளின் மீதே யாழ்க்குடாநாடு அமைந்துள்ளது. சிலபகுதிகளில் இந்த பாறைகள் நிலமட்டத்துக்கு அண்மையாகவும் சில இடங்களில் ஆழமாகவும் இந்த பாறைகளே உள்ளன.
சீமெந்து தயாரிப்புக்கான மூலப்பொருளான சுண்ணாம்பு பாறைகள் எனும் இந்த வளத்தை குறிவைத்து தான் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த சுண்ணாம்புக் கற்பாறைகளிடையே ஏராளமான வெடிப்புகள் உள்ளன. அத்துடன் அவை மெதுவாக கரையும் தன்மை கொண்டவை. அதனால் தான் சுடுதண்ணீர் கொதிக்க வைத்த கேத்தலின் அடியில் கல்சியம் படிவுகளை நீங்கள் காண்பதுண்டு.
இந்த பண்புளால் இந்த பாறைகளுக்குள் நிலத்தடியில் மிகப்பெரிய நிலத்தடி நீர்த்தேக்கங்கள் போன்ற இயற்கை அமைப்புகள் உண்டு.
யாழ்க்குடாநாட்டை பொறுத்தவரை அவ்வாறான மேற்பரப்பை அண்டிய 5 shallow aqufiers ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் சுண்ணாகம் aqufier மிகப்பெரியது. வழுக்கி ஆற்றின் படுக்கை அந்த aqufier க்கு நீர் ஊட்டும் உயிர்நாடியாக உள்ளது.
இன்னும் கிழே சென்றால் Deep aqufiers என்று சொல்லப்படும் சற்று ஆழமான அதே போன்ற கட்டமைப்புகள் இருக்கும். அதன் கீழை செல்லும் போது Saline water என்று சொல்லப்படக்கூடய நிறைகூடிய உவர்நீர் இருக்கும்.
நமது குடாநாடு கடலால் சூழப்பட்டிருப்தால் எப்போதும் கடல் நீர் உள்ளே புகுந்து மேற்படி எமது நீர்க் கட்டமைப்பு உவராகும் அபாயம் இருந்துகொண்டே இருக்கும்( காலப்போக்கில் முற்றாக உவராகி வரும் காரை நகர் அதற்கு ஒரு உதாரணம்) . ஆனால் அவ்வப்போது கிடைக்கும் மழைநீர் நிலத்தினுள் சென்று இந்த இடைவெளிகளை நிரப்புவதோடு உயர் அழுத்தத்தையும் கொடுப்பதால் இந்த கட்டமைப்பில் இருந்து மேலதிக நல்லநீர் கடலினுள் உந்தப்படும் தன்மை இப்போது வரை நடக்கிறது. அவ்வாறு இந்த aqufier இல் இருந்து நிலத்தடி நீர் கடலினில் உந்தப்படும் இடங்களாக கீரிமலை, மருதங்கேணி போன்ற இடங்கள் ஏற்கவே ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நன்னீர் கலக்குமிடம் உவர்த்தன்மை குறைவாக இருக்கும் காரணத்தாலேயே மருதங்கேணியில் உவர்நீர் சுத்திகரிப்புநிலையும் பிரேரிக்கப்பட்டது.
ஆக இந்த சுண்ணாம்புக்கற் பாறை வெடிப்புகளினூடு பாய்ந்தோடும் நீரைத்தான் நாம் ஊற்று என்று கண்டுபிடித்து கிணறுகளை வெட்டியுள்ளோம். நிலாவரை கிணறு போன்ற இடங்கள் இந்த பிரமாண்ட நிலத்தடி நீர்த்தேக்கத்துடன் பெரிய நேரடித் தொடர்பில் இருப்பதால் வற்றாத கிணறுகளாக அறியப்படுகின்றன.
அதேபோல தாள்வான பகுதியில் உள்ள பொக்கணை கிணறு, மாரிகாலங்களில் இந்த aqufier உள் அழுத்தம் அதிகரித்து நீரை வெளியே தள்ளுகிறது. நிற்க.
இன்னொருபுறம், உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால்
இப்போது கிடைக்கும் மழைவீழ்ச்சி பற்றியும் சற்று பேசியாக வேண்டும்.
கடந்த காலங்களில் வருடத்திற்கு 120 நாட்கள் வரை யாழ்ப்பாணத்துக்கு கிடைத்து வந்த மழைவீழ்ச்சி பாதியாக 60 நாட்களாக சுருங்கிவிட்டது. ஆனால் அதே அளவு அல்லது சில வேளைகளில் அதிக மழை குறைந்த நாட்களில் கிடைக்கிறது.
நாங்கள் வீட்டு வளவு முழுவதையும் காங்கிறீட்டால் மூடியும், வாய்க்கால்கள் சீமெந்தால் கட்டப்பட்டும், பல குளங்கள் பாதி மூடப்பட்டும்( தூர்வாரப்படாமல்) இருப்பதாலும் கிடைக்கும் மழை, சில நாள் வெள்ளப்பிரச்சினைகளுடன் வெகு விரைவாக கடலை சென்று அடைந்துவிடுகிறது. ஆக நிலத்தடிக்கு முன்னர் போல நீரை மெதுவாக ஊடகடத்த இப்போது முடிவதில்லை.
இது அதிக வரண்ட நாட்களை எங்களுக்கு உருவாக்கி வருகிறது. நிற்க.
இந்த களச்சூழல் இவ்வாறு இருக்க,
அண்மைக்காலங்களில் கட்டுப்பாடு அற்ற நிலையில் ஏராளமான குழாய்க்கிணறுகள் கண்மூடித்தனமாக அடிக்கப்படுகின்றன. இந்தப்பதிவு குழாய்க்கிணறுகளுக்கு முற்றிலும் எதிரான பதிவு அல்ல. அவை சரியான முறையில், சூழலின் நீர்பாதுகாப்பை உறுதிப்படுத்தி அடிக்கப்பட வேண்டும் என்பதையே பேசவிளைகிறது.
இலங்கையில் குழாய்கிணறுகளை அடிப்பதற்கு சட்டபூர்வ அனுமதி பெறப்படவேண்டும்.
பிரதேச செயலகங்கள், இலங்கை நீர்வள சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உள்ளட்ட அரச திணைக்களங்கள் தான் அதன் பங்காளிகள்.
1.அடிக்கவேண்டிய குழாய்க்கிணறுகளின் ஆழம், அந்த பிரதேசத்தில் உள்ள நீர்ப்பாவனை, ஏனைய கிணறுகளின் ஆழம், எடுக்கவேண்டிய நீரின் அளவு, எடுக்க கூடிய நீரின் அளவு உள்ளிட்ட பல்வேறு தரவுளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டும். ஊழலுக்கு விலைபோகாமல் மேற்படி அரச திணைக்களங்கள் அந்த பணியை சரியாக செய்ய வேண்டும்.
- குழாய்க்கிணறு அடிக்கும் இயந்திரம் கொண்டுவரும் நிறுவனங்கள் அதற்கான அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்கவேண்டும். அவர்களுக்கு number plate வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த பணியை உணர்ந்து சரிவரச்செய்யவேண்டும்.
- பாவனையாளர்கள் பக்கத்துவீட்டுக்காரனுக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை என்ற மனநிலையில் கொடுக்கப்பட்ட அனுமதியை தாண்டி அதிக ஆழமாக குழாய்க்கிணறு அடித்தாலோ, அதிக நீரை வியாபாரத்தேவை உள்ளிட்ட விடையங்களுக்காக உறிஞ்ச ஆரம்பித்தாலோ சூழலில் உள்ள கிணறுகள் வற்றும்.
- அரச திணைக்களங்கள் மேற்படி அனுமதிப் பத்திரங்கள் பெறாமல் தோண்டப்பட்ட கிணறுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிகமான ஆழத்துக்கு தோண்டப்பட்ட கிணறுகளை மூட ஊழல் இல்லாமல் நியாயமாக முன்வரவேண்டும்.
- பொதுமக்கள் இது தொடர்பான விழிப்புணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் பிரதேசத்தில் அடிக்கப்படும் குழாய்க்கிணறுகளின் அனுமதியை விசாரிக்கவும். குழாய்க்கிணறு தோண்டும் நிறுவனத்தின் இயந்திர அனுமதியை சரிபார்க்கவும். அத்துமீறி அனுமதி இன்றி அடிக்கப்படும் குழாய்க்கிணறு மற்றும் அனுமதிக்கு அதிகமாக வியாபாரத்தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் குழாய்க்கிணறுகளை பகிரங்கப்படுத்தவும்.
911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிட்டால், பொலீஸ் திணைக்களம், பிரதேச செயலகம், கிராமசேகவர், நீர்வள சபை ஆகியவற்றுக்கு மேற்படி முறையீடு உடனடியாக அனுப்பப்படும். பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கும்.
இவற்றை நீங்கள் செய்யாத பட்சத்தில் யாழ்க்குடாநாட்டின் கிணறுகள் வற்றி, காலப்போக்கில் மொத்தக்குடாநாடும் உவர் நீராவதை இன்னுல் சிலகாலத்தில் பார்ப்போம்.
மேற்பரப்பில் தான் நீங்கள் எல்லைகளை போடலாம். பணக்காரன், ஏழை, இந்த தொழில் செய்பவன், படித்தவன் படிக்காதவன், இந்த சாதிக்காரன், அந்த மதத்தவன், இந்த கிராமம், அந்த பிரதேசம், அந்த மாவட்டம்
என்ற வாதங்கள் எல்லாம் மேற்பரப்பில் போடப்பட்ட வெறும் வேலிகளும் மதில்களும் மட்டுமே!
நிலமும், நீரும், வானும் மண்ணும் காற்றும் மழையும் என்றுமே எல்லைகளை பார்ப்பதில்லை🙏
வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் எங்களை போன்ற ஒரு மாவட்டத்தில் 1990 முன்னர் வரை கிணறுகளில் நீரை எடுத்து பருகி வந்ந மக்கள் குழாய்க்கிணறுகளை 1990 களின் பின்னர் கட்டுப்பாடின்றி அடிக்க ஆரம்பித்து இப்போது 250 அடி ஆழம் வரை மீண்டும் மீண்டும் குழாய் கிணறுகளை ஆழப்படுத்தி நீரை தேடுகின்றனர் என்பதை அண்மையில் Young water professionals – north( வடக்கின் நீர்த்துறைமையாளர் வட்டம்) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்த இணையவழிகலந்துரையாடல் ஒன்றில் கலந்து சிறப்பித்த பேராசிரியர் கவலையுடன் விளங்கப்படுத்தினார். இத்த நிலை நாளை எங்கள் பிரதேசத்திற்கும் வருவதை தடுக்க இன்றே விழித்துக்கொள்வோமாக.
நீரின்றி அமையாது உலகு.